நட்சத்திரங்கள்

வேத ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள், 9 நவகிரகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நட்சத்திரங்களில் மகம் என்பது ஒரு முக்கியமான நட்சத்திரமாகத் திகழ்கிறது. நட்சத்திர வரிசையில் 10 ஆம் இடத்தைப் பெறுகிறது.

கிரகங்கள் 9 உம், இந்த 27 நட்சத்திரங்களின் அதிபதிகளாகத் திகழ்கின்றன. இவ்வாறு, மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது கிரகம் ஆகும். 12 ராசிகளில், சிம்மம் என்பது, மகம் நட்சத்திரத்தின் ராசியாகும். சிம்மத்தின் ராசி அதிபதி சூரியன்.

‘மகம் ஜகத்தை ஆளும்’ என்பது முது மொழியாகும். ‘எந்த இடத்தில் இருந்தாலும், எந்தத் துறையில் பணி செய்தாலும், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவரவர்கள் உள்ள இடங்களிலும், பணியில் ஈடுபட்டுள்ள துறைகளிலும், அதிகாரத்துடன் திகழ்வார்கள்; தலைமைப் பொறுப்பு வகிப்பார்கள் என்பது இதன் பொருள். இது நடைமுறை உண்மையாகவே உள்ளது என்பதை, பல மக நட்சத்திர அன்பர்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

இனி இவர்களது குண நலன்களை சுருக்கமாகப் பார்ப்போம்

மகம் நட்சத்திரம் (Magam Natchathiram) - குண நலன்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாக விளங்குவார்கள். தமது குறிப்பிடத்தக்க இயல்புகளாலும்., சிறப்பான செயல்பாடுகளாலும், மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டும், மேன்மையாகவும் தெரிவார்கள். இவர்களது செயல்பாடுகளில் சுருசுருப்பும், அனுபவ அறிவும் மிளிரும். பணித்துறையில் நல்ல நிர்வாகத் திறன் கொண்ட இவர்கள், தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றிலும், முழுமனதுடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தின் மீது பாசம் கொண்ட மகம் ராசி அன்பர்கள், கடவுள் நம்பிக்கையும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகம் கொண்டிருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பொதுவாக, உண்மை வழிப்படி ஒழுகுபவர்கள், மனசாட்சிப்படி நடப்பவர்கள் எனலாம். எனவே, உள்ளொன்று வைத்துப், புறமொன்று பேசுவது என்பது, சாதாரணமாக, இவர்கள் அறியாத கலையாகவே இருக்கும் எனலாம். எந்தச் செயலாக இருந்தாலும், அது குறித்து தீவிரமாகச் சிந்தித்து, அதன் அனைத்து அம்சங்களையும் நன்கு ஆராய்ந்து அறிந்த பின்னரே, அதை இவர்கள் செய்யத் துணிவார்கள். ஆனால், இவ்வாறு ஒரு செயலில் துணிந்து இறங்கி விட்டால், அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு, எந்த எல்லை வரையும் சென்று போராடுவார்கள். அதே நேரம், தாங்கள் நினைக்கும் செயல்களைச் செய்து முடிப்பதில் இவ்வளவு தீவிரமான உள்ள இவர்கள், அதில் ஏதேனும் தவறு நேர்ந்து அதற்கு இவர்கள் எந்த வகையிலும் காரணமாக இருந்து விட்டால், அதற்காக, வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ தயங்காத, பெரிய மனது கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

சுதந்திர எண்ணம், செயல்பாடுகள் போன்றவற்றில் மிக்க நம்பிக்கையும், விருப்பமும் கொண்ட இந்த நட்சத்திர அன்பர்களுக்கு, பொதுவாக, பிறரிடம் பணி செய்வதை விட, சுயமாக தொழில், வியாபாரம் போன்றவற்றை நடத்துவதிலேயே விருப்பம் அதிகம் இருக்கும். இதன் காரணமாகவே, பிறர் எவரும் தங்கள் வாழ்க்கையிலோ, நடவடிக்கைகளிலோ தலையிடுவதை, இவர்கள் விரும்ப மாட்டார்கள். தங்களுக்கென்று வகுக்கப்பட்ட தெளிவான கொள்கைகளைக் கொண்ட இந்த அன்பர்கள், அந்தக் கொள்கைகளின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்கள். அதன்படி நடக்க முயல்வது, இவர்களது இயல்பாக இருக்கும். மற்றவர்களை மதித்து, கௌரவமாக நடத்தும் இவர்கள், பொதுவாக, எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

பிறரைத் தங்களிடம் ஈர்க்கக் கூடிய, வசீகரத் தன்மை மிக்க மகம் நட்சத்திர அன்பர்கள், பணம், பொருள் ஈட்டுவதில் ஆர்வம் கொண்டவர்கள். பயணங்கள் செய்வதிலும், இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும்.

ஞான காரகன் எனப்படும் கேது பகவானை அதிபதியாகக் கொண்ட மக நட்சத்திர அன்பர்கள், பல துறைகளிலும் அறிவும், ஞானமும் பெற்றிருப்பார்கள். பலவற்றையும் கற்று, உணர்வதிலும் ஆர்வம் கொண்டிருப்பர்கள். இவர்களில் சிலராவது, கவிதை புனைந்து பாடுவதில் வல்லமை பெற்றிருப்பார்கள். இவர்கள், கற்பனை உலகில் அடிக்கடி சஞ்சரிக்கும் வாய்ப்பும் உள்ளது. சாதாரணமாக, இவர்களது இளமைக் காலத்திலேயே நன்மைகளைத் தரும் சுக்கிர தசை ஏற்படுவதால், வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, பல சுகங்களையும் இவர்கள் அனுபவிக்கும் வாய்ப்புள்ளது.

இவர்கள் மனதில் காதலுக்கு அதிக இடம் இருக்கும். எனவே, காதல் திருமணமே இவர்களுக்கு உகந்ததாக இருக்கும். எனினும், வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர்களுக்கு, ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது சிலர் மனதில் பற்றற்ற நிலையை உருவாக்கக் கூடும். இதனால் குடும்பம், உறவுகள் மீதெல்லாம், இவர்களுக்கு ஆர்வமும், அக்கறையும் குறைந்துவிடும் வாய்ப்புள்ளது.

மகம் நட்சத்திரம் – பல பாதங்களில் பிறந்தவர்கள்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் உள்ளன. இவ்வாறு மகம் நட்சத்திரத்தின் 4 பாதங்களில் ஒவ்வொன்றிலும் பிறந்தவர்கள் குறித்து, சுருக்கமாகப் பார்ப்போம்.

மகம் முதல் பாதம் - ராஜ தந்திரம் மிக்கவர்களான இவர்கள், அரசியலில் செல்வாக்குடன் திகழும் வாய்ப்புள்ளது. எதிரிகளையும், போட்டியாளர்களையும் திறமையாகச் சமாளித்து, வீழ்த்தும் வல்லமையும் பெற்றிருப்பார்கள். நாட்டுப் பற்று மிக்கவர்களான இவர்கள், தங்கள் இனத்திற்காகவும் பாடுபடுவார்கள்.

மகம் இரண்டாம் பாதம் – பிறரை வசீகரிக்கும் வகையில் அழகிய தோற்றம் கொண்ட இவர்கள், பலராலும் போற்றப்படும் வகையில் வாழும் வாய்ப்புள்ளது. இசை போன்ற கலைகளை ஆர்வத்துடன் அனுபவிக்கும் இவர்கள், தேவையானவர்களுக்குத் தயங்காமல் உதவுபவர்கள். துரோகம் செய்தவர்களையும், எதிரிகளையும் கூட, மன்னிக்கக் கூடியவர்கள்.

மகம் மூன்றாம் பாதம் – இவர்கள் பொதுவாக, அஞ்சா நெஞ்சமும், நேர்மையான அணுகுமுறையும் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். உடன் பிறந்தவர்கள் மீது அதிக பாசம் கொண்ட இவர்கள், படிப்பது, கதை, கவிதை எழுதுவது போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

மகம் நான்காம் பாதம் – அலட்சியப் போக்கு, தற்பெருமை போன்றவற்றை உடைய இந்த அன்பர்கள், மனதில் தோன்றும் பல்வேறு எண்ணங்களால் அலைக்கழிக்கப் படுவார்கள். வாழ்க்கையில் வெற்றி தோல்விகளையும், ஏற்ற இறக்கங்களையும் சந்திக்கும் இவர்களைத், திறமை, உழைப்பு இருந்தும், வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டிக் கொண்டே இருக்கும் வாய்ப்புள்ளது.

Author's Bio: 

Read on to know more about Magam Natchathiram Palangal ( மகம் நட்சத்திரம் பலன்கள்) and Magam Natchathiram Gunangal ( மகம் நட்சத்திரம் குணங்கள்) in Tamil - https://www.astroved.com/tamil/nakshatra/makam-nakshatra-palangal/